விஜயதசமியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”ஒரு சமூக மக்கள், மற்றொரு சமூக மக்களை தாக்குவதாக சில செய்திகளை நாம் கேட்கிறோம். ஒரு சமூக மக்களை மட்டுமே குறிவைத்து தாக்கப்படுவதில்லை. பெரும்பாலும், இவ்வாறு நடந்த நிகழ்வுகள் அனைத்தையுமே திரித்துதான் நமக்குக் கூறப்படுகிறது. சில சுயநலவாதிகள் வேண்டுமென்றே ஒரு சமூக மக்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்துகின்றனர்.
இதன்மூலம் இரு சமூகங்களுக்கிடையே வன்முறையை உருவாக்கவே அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். இம்மாதிரியான சம்பவங்களைக் குறிப்பிட ‘கும்பல் வன்கொலை’ (Lynching) என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த வார்த்தை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாகும். இது போன்ற சம்பவங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். ஆனால், சிலர் ‘கும்பல் வன்கொலை’ என்ற திரிக்கப்பட்ட வார்த்தையைக் கூறி இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள். இதுபோன்றவர்களுக்கு நாம் பாதுகாப்பு அளிக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.