கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியைச் சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சட்டப்பேரவை முடிவில் தலையிட முடியாது என்றும், அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வலியுறுத்தக் கூடாது எனவும் தீர்ப்பு அளித்தது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, எங்கள் கூட்டணியின் மீது சிலர் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மக்கள் மத்தியில் இந்த ஆட்சியை நிலையற்றது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றைக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது என தெரிவித்தார்.