பிரதமர் நரேந்திர மோடி எளியோருக்கான ஜன் ஔஷதி மருத்துவ வசதி திட்டம் குறித்து திட்டத்தின் பயனாளர்களிடம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், "இந்தத் திட்டம் ஒருநாளில் பேசிமுடித்து கொண்டாட வேண்டிய திட்டம் அல்ல; இந்தத் திட்டம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய திட்டம்.
நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதி தங்கள் அருகிலேயே சென்றுசேர அரசு தீவிரமான வழிமுறைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் பகுதியாக எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்தர மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை புதிதாகத் தொடங்கப்படுகின்றன.
தற்போது அச்சுறுத்திவரும் கொரோனா நோய் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன. அவற்றைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். எந்தவொரு சந்தேகம் என்றாலும் அதை மருத்துவர்களிடம் கலந்தாலோசிப்பது நலம்.
இந்திய மக்கள் தங்கள் உடல்நலன் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறுவர்கள், பெண்கள், குழந்தைகளின் சுகாதாரம் குறித்து தேவையான விழிப்புணர்வு சென்றுசேர வேண்டும்" என்றார்.
இந்த கலந்துரையாடலின்போது திட்டப்பயனாளர்களில் குலாம் நபி என்ற பெயர் கொண்ட ஒருவரிடம் மோடி உரையாடினார். பயனாளரின் பேரைக் கேட்டதும் மோடி அவரிடம், குலாம் நபி அவர்களே, உங்கள் பெயர் கொண்ட நண்பர் ஒருவர் டெல்லியில் உள்ளார்.
அடுத்தமுறை அவரைச் சந்திக்கையில் உங்களைப் பற்றி நிச்சயம் தெரிவிப்பேன் என்று கலகலப்பாகத் தெரிவித்தார். காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் குலாம் நபி ஆசாதை பிரதமர் மோடி இவ்வாறு மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: அயோத்தி செல்கிறார் தாக்கரே!