உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம்ஜென்ம பூமி விவகாரத்தில் பல ஆண்டுகளுக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, ராமர் கோயில் ஸ்ரீ ராம்ஜென்ம பூமி தீர்த ஷேத்திரா அறங்காவலர் குழு அமைக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டப்படுகிறது. இதற்காக அறக்கட்டளை சார்பில் இரண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டுவருகிறது.
கோயில் கட்டுமானத்திற்காக மக்கள் தொடர்ச்சியாக நிதி அளித்து வருவதாகவும், கரோனா லாக்டவுன் காலத்தில் கூட ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்களில் பல்வேறு மக்கள் தாராள நிதியுதவி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ரூ. 4.60 கோடி நிதியை மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது எனவும் இந்த நிதியை முறையாக பயன்படுத்தி பிரமாண்டமான கோயில் அமைக்கப்படும் எனவும் அறக்கட்டளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வந்தே பாரத்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்!