அதிவேகமாக பரவிவரும் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக முடங்கி வைக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவை நாளை (மே 25) முதல் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள், வழிமுறைகள் அமலில் உள்ளதால் விமானச் சேவை செயல்படுத்துவதில் குழப்பம் நிலவிவருகிறது.
இது குறித்து மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஸ்முக் கூறுகையில், "இந்த நேரத்தில் சிகப்பு மண்டலங்களில் விமான நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது சரியான முடிவல்ல " என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், "உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவை தொடங்குவதை ஒத்திவைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, விமானச் சேவைகள் தொடங்குவது குறித்த மத்திய அரசு அறிவிப்புக்கு மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனிடையே, ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஏர் ஏஷியா நிறுவனம், பயணம் செய்யும் மாநில அரசுகளின் சுகாதார வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயணிகள் சென்றடையும் மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டாலோ அல்லது திரும்பி அனுப்பப்பட்டாலோ அதற்கு தாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா உறுதி