நாட்டின் 17ஆவது பிரதமரை தேர்வு செய்வதற்கான மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதில் காலை முதலே பாஜக பெரும்பாலான இடங்களிலும் முன்னிலை வகித்து வந்த பாஜக 340-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருவது எதிர்க்கட்சியினரை கலக்கம் அடையச் செய்துள்ளது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் அங்குள்ள, 224 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றியது. எனினும், 78 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன்(37) கூட்டணி அமைத்து பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து பாஜக காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமல்லாது, காங்கிரஸ் - மஜத கூட்டணி இடையே பதவி காரணமாக பல்வேறு மோதல்களும் இருந்து வந்தன.
இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையிலும் கடந்த சில நாட்களாக மஜத-காங்கிரஸ் இடையே ஏற்பட்ட சில கசப்பான மோதல்களும் இந்த பின்னடைவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே கார்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றால், அங்குள்ள ஆட்சியில் மாற்றம் ஏற்படுவதற்கு பெரிய வாய்ப்புள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.