புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
நிலுவையில் உள்ள ஊதியதொகையை வழங்கக்கோரி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கடந்த ஒருவார காலமாக உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பை அப்புறப்படுத்தாமல் பெருமளவில் குவிந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உடனடியாக ஊழியர்களின் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவினர் கோஷமிட்டப்படியே அங்கு குவிந்து கிடக்கிற குப்பைகளை சுத்தம் செய்தனர்.