புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "புதுச்சேரி மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் திடீரென்று மறைவெய்தினார் என்ற வருத்தத்திற்குரிய செய்தியறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுப்பிரமணியன், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் தலைவராக இருந்தாலும், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளராக இருந்தபோது கட்சிப் பணியாற்றி, கழக வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பைப் பெற்றவர் என்பதை நானறிவேன். கரோனா தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது புதுச்சேரி மக்களுக்குப் பேரிழப்பு.
கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அனைவரையும் இந்தத் தருணத்தில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அ. துரைக்கண்ணு, திடீரென மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
பத்திரிகையாளராக இருந்தாலும், தமக்கென சில கொள்கைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்த மிகச் சிறந்த சுயமரியாதைக்காரர். முற்போக்கு சிந்தனை கொண்ட அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" எனத் தெரிவித்துள்ளார்.