மத்திய பிரதேச காங்கிரஸ் இளம் தலைவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, இன்று தனது கடிதத்தை இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் கமல் நாத் மீதான அதிருப்தியே சிந்தியா விலகுவதற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மூத்தத் தலைவரான கமல் நாத், தனது வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக முட்டுக்கட்டையாக செயல்படுவதாக அவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரும்பிய வரலாறு:
ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த செயல் அவரது குடும்ப வரலாற்றை மீண்டும் கண்முன் நிறுத்துவதாகத் தெரிகிறது. அவரது பாட்டியான விஜய ராஜே சிந்தியாவை அன்றைய காங்கிரஸ் முதலமைச்சர் டி.பி. மிஸ்ரா அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டார். தங்களின் அரச குடும்பத்திற்கு இழைத்த அவமானமாக கொதித்தெழுந்த விஜய ராஜே சிந்தியா, தன்னுடைய அதிருப்தி உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்து, ஜன சங்கத்தைச் சேர்ந்த கோவிந்த நாராயண் சிங் என்பவரை முதலமைச்சராக்கினார்.
பாட்டியின் வழியிலேயே தற்போது நடைபோட்டுள்ள ஜோதிராதித்ய சிந்தியாவும், கமல் நாத் அரசை கவிழ்த்து தனது ஆதரவு உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைந்து சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அரசு அமைய வழிவகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சாம்பலைப் பூசி ஹோலியைக் கொண்டாடும் விநோத கிராமம்