மேற்குவங்கம் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கொல்கத்தாவிலிருந்து சென்ற கார் டைமண்டு துறைமுகம் பகுதியை அடைந்தபோது கல்வீச்சு நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, ஊடகவியலாளர்கள் ஆகியோரின் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கல் வீச்சு சம்பவத்தை பாஜகவின் மூத்த தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அராஜக ஆட்சியை செய்துவருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்குவங்கத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா சென்ற காரின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இச்சம்பவத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அரசின் ஆதரவாளர்கள் நடத்திய இந்த தாக்குதல் குறித்து மாநில அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கொடுங்கோல் மற்றும் அராஜக ஆட்சியில் ஈடுபட்டுவருகிறது. மேற்குவங்கத்தில் அரசியல் ரீதியான வன்முறை தீவிரமாக நடைபெற்றுவருவதை கண்டு வேதனை அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடிதம் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து, உள்துறை செயலாளர், மேற்கு வங்கத்தின் டிஜிபி ஆகியோர் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.