புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி வாலிபர்கள் ஒன்றிணைந்து புதுச்சேரி சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்கம் ஒன்றை அமைத்துள்ளனர். இச்சங்கம் சார்பில் பல்வேறு வெளிமாநில கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் விளையாடி பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
இதேபோன்று, கடந்த ஜூன் மாதம் பஞ்சாபில் நடைபெற்ற ஆறாவது தேசிய சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் முதன்முறையாக இச்சங்கத்தை சேர்ந்த 15 நபர்கள் கொண்ட அணி கலந்துகொண்டது. எவ்வித முன் அனுபவமும் இல்லாத இவர்கள் காலிறுதி வரை சென்றனர்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு வந்திருந்த இந்த வீரர்கள் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், ”கூடைப்பந்து போட்டிகளில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு சார்பில் பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். விளையாட்டு உபகரணங்கள், சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.