பிறந்தவுடன் அனைத்து ஜூவராசிகளும் உண்ணும் முதல் உணவு தாய்ப்பால் தான். ஆராக்கியம் நிறைந்த இந்த தாய்ப்பாலை குறைந்தபட்சம் குழந்தை திட உணவுப் பொருள்களை உட்கொள்ளத் தொடங்கும் வரையாவது கொடுக்க வேண்டும். ஆனால், தாய்ப்பால் அளிப்பதில் பல தாய்மார்களுக்கு சிக்கல்களும் உள்ளன. இவை குழந்தை ஆரோக்கியமாக வளர்வதில் இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே, தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் எத்தகைய உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக் கூடாது என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஹைதராபாத்தின் ஏ.எம்.டி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ராஜ்யலட்சுமி மாதவம்.
தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
- பாலூட்டும் தாய்மார்கள் ஒரே நேரத்தில் அதிக அளவிலான நீரை அருந்துவதற்கு பதிலாக, தேவைக்கு ஏற்ப சரியான இடைவெளியில் நீரை அருந்தி அருவது மிகவும் நல்லது. தேங்காய்ப் பாலும், நீரும் தாய்ப்பால் சுரக்க பெருமளவு உதவுபவை. பாலில் சாதரணமாகவே அதிக நன்மைகள் உள்ளன. குறிப்பாக தேவையான அளவு கால்சியம் பெற தாய்மார்கள் அவசியம் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- டாலியா போன்ற கோதுமை தயாரிப்புகள் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கும். ஓட்ஸ் எடுத்துக் கொள்வதையும் பரிசீலிக்கலாம்.
- கருப்பு மிளகு, சீரகம், இலவங்கப்பட்டை, கேரம் விதைகள் போன்ற மசாலாப் பொருள்களை தினசரி சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம், சிவப்பு மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- இஞ்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் கொண்டது.
- பூண்டு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, செரிமானமும் அதிகரிக்கிறது. இதுமட்டுமின்றி தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும் இயற்கை மூலிகையாகவும் இஞ்சி கருதப்படுகிறது.
- வெந்தய விதைகளில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது. தினசரி சமையலில் இதை ஒரு மசாலாவாகப் பயன்படுத்தலாம் அல்லது சில வெந்தய விதைகளை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.
- பெருஞ்சீரக விதைகள் தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. எனவே, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரக விதைத்தூளை 100ml பாலுடன் கலந்து உட்கொள்ளலாம்.
- அனைத்து பருவகால பழங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக மாதுளைப் பழத்தை தாய்மார்கள் சாப்பிட வேண்டும். அது இரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமின்றி தாய்ப்பாலின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.
- முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொள்ளலாம். வேண்டுமானால் பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, பின்னர் அரைத்து, பாலில் சேர்த்து அருந்தலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- மிகவும் காரமான உணவு.
- சூடான உணவுகள்.
- ரொட்டி.
- பர்கர்கள் / பீஸ்ஸாக்கள்.
- ஆல்கஹால் உல்கொள்ளுதல், புகைப் பிடித்தல்
- புகையிலை.
- காபி / காஃபின் பொருட்கள்
இவை தாய்ப்பாலின் உற்பத்திக்கு இடையூறு விளைவிப்பதால் அவற்றைத் தவிருங்கள். குறிப்பாக மன அழுத்தங்கள் இருக்கக்கூடாது. குழந்தை பெற்றெடுத்த தாய் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சூழலில் வாழ வேண்டும்.
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பிறக்கப்போகும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, கர்ப்பக் காலத்திலும் பிரசவத்திற்குப் பிறகும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றையும் கவனத்துக் கொள்ள வேண்டும். உங்களது பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலமும் உங்கள் கைகளில் தான் உள்ளது.