சிவசேனா நிறுவனரும், அனைத்துக் கட்சி தொண்டர்களாலும் மராத்தி சிங்கம் என போற்றப்பட்டவருமான பால சாகேப் தாக்கரேவின் (பால் தாக்கரே) 7ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது சிவாஜி பூங்காவிலுள்ள அவரது நினைவிடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வினோத் தவ்டே, பங்கஜா முண்டே உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தும் போது, சிவசேனா தொண்டர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். நாங்கள் திரும்பி வந்து விட்டோம். மகாராஷ்டிராவில் யார் ஆட்சி? சிவசேனா ஆட்சி..! என மகிழ்ச்சி பொங்க முழங்கினார்கள்.
முன்னதாக பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரே, மகன் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
பால் தாக்கரேவின் நினைவு தினம் என்பதால், சிவாஜி பூங்காவில் காவிக்கொடி பறந்தது. அப்பகுதி சிவசேனா தொண்டர்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்தது. பா.ஜனதா தொண்டர்களும் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிவசேனா புதிய கூட்டணி அமைத்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் பால் தாக்கரேவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சாஜன் பூஜ்பால் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் சார்பில் முக்கிய தலைவர்கள் யாரும் பால் தாக்கரேவிற்கு அஞ்சலி செலுத்தவில்லை. எனினும் மாநில தலைவர் தனது டவிட்டர் பக்கத்தில் தாக்கரேவை நினைவுக் கூர்ந்திருந்தார்.
தேவேந்திர பட்னாவிஸ் அரசில், அமைச்சராக இருந்த வினோத் தவ்டே, பா.ஜனதா, சிவசேனா என்ற கூட்டுக் குடும்பத்தின் தலைவர் பால் தாக்கரே என்று புகழாரம் சூட்டினார்.
முன்னாள் அமைச்சரான பங்கஜா முண்டே, “நாங்கள் பால் தாக்கரே இல்லாத குறையை உணர்கிறோம்” என்றார். சிவாஜி பூங்காவில் பால் தாக்கரேவின் பேச்சு தொடர்ந்து ஒலிபரப்பானது.
இதையும் படிங்க: சிவசேனா மன்னிப்பு கேட்டால் கூட்டணி தொடருமா? ஈடிவி பாரத்திற்கு பாஜக பதில்