உத்தப் பிரதேச தலைநகர் லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பாஜக பேரணியில் உரையாற்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளைப் பரப்பிவருகின்றனர். யாருடைய குடியுரிமை பறிப்பது குறித்து அந்தச் சட்டத்தில் எங்கும் இடம்பெறவில்லை. மாறாக, இந்தச் சட்டம் வேண்டியவர்களுக்கு குடியுரிமை வழங்கவே கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதற்கு வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொதுவெளியில் என்னுடன் விவாதம் செய்ய தயாரா?" என்றார்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டமானது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத்துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னால் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள் ஆகிய மதத்தவருக்கு குடியுரிமைப் பெற்றுத் தர வழிவகை செய்கிறது.
ஆனால், இந்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், டெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
பேரணியில் ராமர் கோயில் குறித்து பேசிய அமித் ஷா, "இன்னும் மூன்று மாதங்களில் அயோத்தியில் வானுயர்ந்த ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்" என்றார்.
இதையும் படிங்க : ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு