தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்தத் தாழ்வு மண்டலம் இன்றிரவு புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், "ஆம்பன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப்புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, திசைமாற்றி வடகிழக்குத் திசையில் பயணிக்கும். பின்னர் இது மேற்குவங்கம் அல்லது வங்கதேசம் ஒட்டியுள்ள பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ஐந்திலிருந்து ஆறு நாள்களுக்கு அந்தமான் கடல் பகுதி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒடிசா, அம்மாநிலத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள 12 மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான், மத்திய தெற்கு, மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான சூறாவளிக் காற்று வீசும். எனவே இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மே மாதம் 15ஆம் தேதிமுதல் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் விரைவில் வீடு திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புயலின் காரணமாக ஹரியானா, டெல்லியின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே மாதம் 21, 22ஆம் தேதிகளில் வட இந்திய பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக் கடலில் நாளை உருவாகும் ஆம்பன் புயல்