டெல்லி, மைதான் கார்ஹி பகுதியைச் சேர்ந்தவர் ரோகன், தீப்தி தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், தீப்தி தனது குழந்தைகளுக்கு கல்வி பயில ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மனமுடைந்த தீப்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம் பக்கதினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 90 விழுக்காடு காயமடைந்ததால் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உ.பி.யில் வரதட்சணை கேட்டு இளம் பெண் மீது தீ வைத்த துயரம்!