ஊரடங்கால் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர், லாக்டவுன் 4.0-இல் அறிவித்த தளர்வில் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பி சென்றனர். ஆங்காங்கே சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
இந்நிலையில், டெல்லியில் குடியேறிய தொழிலாளர்களின் தற்போதைய நிலையை அறிய, நமது ஈடிவி பாரத் தெற்கு டெல்லியின் சத்தர்பூர் பகுதிக்கு சென்றோம். அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
அதில் ஒரு பெண் தொழிலாளர் கூறுகையில், "எங்களுக்கு வேலை கிடைக்காததால் பெரும்பாலும் வீட்டில் தான் உள்ளோம். எங்களின் வாழ்க்கை மிகவும் சிரமப்பட்டு நிர்வகித்து வருகிறோம்" என்றார்.
இதைத்தொடர்ந்து மற்றொருவர் கூறுகையில், "வேலை இல்லாததால் பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். ஊரடங்கு காலத்தில் எங்களின் வீட்டு வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், தற்போது மாதந்தோறும் இரண்டு ஆயிரத்து 500 ரூபாய் வாடகை செலுத்துகிறோம். முன்பு சம்பாதிக்கும் பணத்தில் சிறிது தொகையை சேமித்து வைக்க முடியும். ஆனால், தற்போது வாழ்ந்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம்" எனத் தெரிவித்தார்.
ஊரடங்கிற்கு பிறகு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. கரோனா தொற்றை நாட்டிலிருந்து விரட்டியடித்தால் மட்டுமே குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் வரும்.
இருப்பினும் இக்கட்டான சூழ்நிலையில், சில சமூக அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, பண உதவி வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: 250 வகையான அரிய விதைகளை பாதுகாக்கும் மகாராஷ்டிர மாணவி