வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் 53 பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்விவகாரத்தில் 15 பேரை காவல் துறையின் சிறப்பு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து 18 ஆயிரம் பக்கங்களுக்கு காவல் துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதன் நகலை குற்றஞ்சாட்டப்பவர்களுக்கு வழங்க காவல் துறையினர் மறுத்ததை தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகையின் நகல் அதிக பக்கங்களை கொண்டுள்ளதால், அவற்றை பென் டிரைவில் பதிவேற்றம் செய்து வழங்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க வேண்டும் என்ற மாவட்ட நீதிமன்றத்தின உத்தரவை எதிர்த்து டெல்லி காவல் துறையினர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு, நவம்பர் 6ஆம் தேதி நீதிபதி சுரேஷ்குமார் கைட் அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.