கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தில் உளவுத்துறை அலுவலர், காவலர், பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டனர். வியாபாரிகளின் கடைகள் சூறையாடப்பட்டன. இந்த கலவர சம்பவத்தின்போது காவலர்களை நோக்கி இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகள் வைரலானது.
சம்மந்தப்பட்ட இளைஞரை காவலர்கள் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கைது செய்தனர். அவரின் பெயர் ஷாரூக் பதான் என்பதும், அவர் மீது எந்த குற்றவழக்கும் இதுவரை நிலுவையில் இல்லை என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவர் டெல்லி நீதிமன்றத்தில் பிணை வேண்டி விண்ணப்பித்திருந்தார். அந்த மனு கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சீவ் குமார் மல்கோத்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு நீதிபதி பிணை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த நீதிபதி, “ஜனநாயக நாட்டில் எதிர் கருத்தை முன்வைப்பது அடிப்படை உரிமை. அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம், பொதுமக்களுக்கு தொந்தரவின்றி போராட்டம் நடத்தலாம். ஆனால் இந்த வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஷாரூக் பதானுக்கு நீதிமன்றம் பிணை வழங்க விரும்பவில்லை. அவரின் பிணை மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: மருத்துவர் தற்கொலை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தந்தையிடம் விசாரணை!