டெல்லியை சேர்ந்த சம்யக் கங்வால் என்பவர் கடந்த மே ஒன்றாம் தேதி பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பான பதிவு ஆவணம், வெளியிட்ட அரசாணையின் நகல், பி.எம்.கேர்ஸ் அமைக்க முடிவெடுக்கப்பட்ட கோப்புகளில் உள்ள குறிப்புகளின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினார்.
இதற்கு கடந்த 2ஆம் தேதி பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோருவதற்கு பி.எம்.கேர்ஸ் பொது அதிகார அமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதால், நீங்கள் கோரும் ஆவணங்களை வழங்க முடியாது என்று கூறப்பட்டது.
இதற்கு எதிராக அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பி.எம்.கேர்ஸை பொது அதிகாரமாக அறிவிக்கவேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
அந்த வழக்கை நீதிபதி நவீன் சாவ்லா காணொலி மூலம் விசாரித்தார். அப்போது, பிரதமர் அலுவலகம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "பி.எம்.கேர்ஸ் பொது அதிகார அமைப்பு என்பது ஏற்கத்தக்கது அல்ல. இதனை நிரூபிக்கும் வகையில் வாதங்களை முன்வைக்கவும் ஆவணங்களை தாக்கல் செய்யவும் அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.