2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை தூக்குத் தண்டனை நிறைவற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். இதனால் தூக்குத் தண்டனையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தின் இந்தத் தீர்பை எதிர்த்து திகார் சிறைச்சாலை அலுவலர்கள் டெல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு டி.என். பட்டேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, “நான்கு குற்றவாளிகளும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி மகிழ்ச்சியாக உள்ளனர். தண்டனையிலிருந்து தப்பிக்க அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். இதனால் அவர்கள் செய்த கொடூரமான குற்றத்திற்காகத் தண்டனையை அவர்கள் பெறாமல் போய்விடக்கூடும்.
தூக்குத் தண்டனையை ஒத்திவைக்கும் விதமாக, நேற்று மேலும் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. தூக்கில் இடப்படும் தேதியை தள்ளிவைக்க அவர்கள் பல்வேறு மனுக்களை அளிக்கின்றனர். வழக்கு இதே பாதையில் சென்றால், இதற்கு முடிவே இருக்காது” என்று வாதிட்டார்.
இதுகுறித்து விளக்கமளிக்க திகார் சிறைத் துறைக்கும் குற்றவாளிக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக இன்று வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்தார். சட்டப்படி மனு நிராகரிக்கப்பட்டு 14 நாள்களுக்கு பின்தான் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட முடியும் என்பதால் குற்றவாளிகள் பிப்ரவரி 15ஆம் தேதி தூக்கிலப்படலாம். இருப்பினும் இன்னும் இரண்டு குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம் என்பதால் தூக்குத் தண்டனை, மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு