கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தினக்கூலிகள் உள்பட பலர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ பல்வேறு மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அதன்படி பொதுமக்களுக்கு உதவ ஏதுவாக டெல்லியிலுள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 2,000 உணவுக் கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கடந்த சில காலமாக டெல்லி வந்துள்ளனர். இப்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் இங்குச் சிக்கியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் எந்த முறையான ஆவணங்களும் இல்லை.
எனவே அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்க ஏதுவாக டெல்லியிலுள்ள அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கு தலா 2,000 உணவுக் கூப்பன்கள் வழங்கப்படும். அதை அவர்கள் எந்த ஏழைக்கும் வழங்கலாம். இதன்மூலம் ஐந்து கிலோ அத்தியாவசிய பொருள்களை அவர்கள் பெற முடியும்.
குடும்ப அட்டை வைத்துள்ள 71 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதலாக அத்தியாவசிய பொருள்களை வழங்குகிறோம். குடும்ப அட்டை இல்லாமல் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்குகிறோம். இதுவரை 10 லட்சம் பேருக்கு கூப்பன்கள் வழங்கியுள்ளோம். இதை மேலும் 30 லட்சமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்தக் கரோனா நெருக்கடி இருக்கும்வரை அனைத்து ஏழைகளுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி இதுவரை இ-கூப்பன்களுக்கு 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
டெல்லியின் மக்கள்தொகை இரண்டு கோடி. நாங்கள் இப்போது 71 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் 30 லட்சம் குடும்ப அட்டை இல்லாதவர்கள் என மொத்தம் ஒரு கோடி பேருக்கு அத்தியாவசிய பொருள்களை இலவசமாக வழங்குகிறோம். இது ஒட்டுமொத்த டெல்லியின் மக்கள்தொகையில் சரிபாதி" என்றார்.
மேலும், அடுத்த மாதம் அத்தியாவசிய பொருள்களின் தொகுப்பில் சோப், உப்பு இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களிடம் ஆலோசனை கேட்கும் ராகுல் காந்தி!