கரோனா வைரஸால் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 319ஆக உள்ளது. அதில் இதுவரை 208 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அரசு போலி கணக்கு காட்டுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து வடக்கு டெல்லியின் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய் பிரகாஷ் பேசுகையில், ''மே 21ஆம் தேதி எங்கள் பகுதியில் கரோனா வைரஸால் 282 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் என மருத்துவ சான்று பெற்ற பின்னரே அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது'' என்றார்.
இதேபோல் தெற்கு மாநகராட்சியின் கமலாஜீத் ஷெராவத் பேசுகையில், ''எங்கள் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 309 பேர் உயிரிழந்தனர். ஆனால் மே 21ஆம் தேதி டெல்லி அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மொத்தமாகவே 194 பேர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை மட்டுமே கூட்டினால் 600க்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்தது தெரியவரும். ஆனால் டெல்லி அரசு கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அறிவித்து வருகிறது.
இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால், டெல்லியில் கரோனா நிலைமைக் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுவது பொய் என தெரியவரும் என்பதால் கெஜ்ரிவால் அரசு அஞ்சுகிறது'' என்றார்.
இதையும் படிங்க: டெல்லி சந்தையில் தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை