ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்பிணை வழங்கியது.
- இந்தியாவைவிட்டு வெளியேறக்கூடாது,
- வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்யக் கூடாது
உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இருவருக்கும் முன்பிணை வழங்கப்பட்டது. முன்னதாக ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்பிணை கிடைத்தது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் அமலாக்கத் துறை, சிபிஐ வழக்கறிஞர்கள் அக்டோபர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2006ஆம் ஆண்டு ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்திருந்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையிடம் முறையான அனுமதியைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் தலையிட்டு உதவியதற்காக, அவருக்கு இதில் பிரதிபலனாக கையூட்டுப்பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன.