நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது. இருப்பினும் குணமடைவோரின் விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு மீண்டும் கரோனா அறிகுறிகள் எழுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனையொட்டி இவர்களுக்காக டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதிதாக போஸ்ட்-கோவிட் கிளினிக் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
இது குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பி.எல்.ஷெர்வால் கூறுகையில், "கரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து அதிக அளவில் அழைப்புகள் வந்தன. பலருக்கு மீண்டும் சுவாசுப் பிரச்னை, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தென்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு போஸ்ட்-கோவிட் கிளினிக் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளின் நுரையீரலை சி.டி ஸ்கேன் மூலமாக ஆராய்வது மட்டுமின்றி, பிற சோதனைகளையும் நாங்கள் மேற்கொண்டு, ஏன் மீண்டும் கரோனா அறிகுறிகள் தென்படுகின்றன என்பது குறித்து சோதனை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.