டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று அறிவிக்கிறது. இதுபற்றி டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா கூறும்போது, “முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. அடுத்தக்கட்ட பட்டியலும் தயார் நிலையில் உள்ளது. அடுத்த கூட்டத்துக்கு பின்னர் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும்” என்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு பின்னர் வெளியாகியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டெல்லியில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்தத் தலைவர் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், சாகோ, ராஜிவ் சட்டவ், சுபாஷ் சோப்ரா, ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெல்லி தலைவருமான ஜே.பி. அகர்வால் கூறும்போது, "ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் விரைவில் எங்கள் கட்சியில் இணைவார்கள்" என்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சி அனைத்து தொண்டர்களையும் பாகுபாடின்றி நடத்துகிறது என்றார். டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 24 புதுமுகங்களுடன் தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்!