சட்ட விவகாரங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எத்தனை கோடி செலழித்தது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "2019-20ஆம் ஆண்டில் ராணுவம், கப்பல் படை, விமானப் படை ஆகியவற்றுக்கு ரூ. 26,12,30,810 வரை செலவழிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதில் வழக்கிற்கான கட்டணம் செலுத்துதல், வழக்குரைஞர், எழுத்தர்களுக்கான கட்டணங்கள், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல் உள்ளிட்ட அனைத்து வகையான சட்ட செலவுகளும் அடக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ராணுவம், கப்பல் படை, விமானப் படை ஆகியவற்றுக்கு எதிராக, அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்கும் ஆகும் செலவை பாதுகாப்புத் துறை அமைச்சகமே வழங்குவதாகவும் அவர் கூறினார்.
அப்போது, "பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் அதிக வழக்குகளை தொடுக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே" என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜான் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர், "இல்லை. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில் அது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்கிறோம். பின், தேவைப்படும்போது மட்டுமே மீண்டும் வழக்குகள் தொடரப்படுகின்றன" என்று கூறினார்.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா காங்கிரஸ் அரசு!