2021ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சமீபத்தில் அறிவித்திருந்தார். கரோனா நோய்த்தொற்றைக் கருத்தில்கொண்டு, இந்தாண்டு பயணத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்தப் பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, தற்போது டெல்லியிலிருந்து 650 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய டெல்லி மாநில ஹஜ் குழுவின் துணை அலுவலர் தமீல் மொஹ்சின் அலி, "முந்தைய ஆண்டுகளில் ஒரேநாளில் சுமார் 600 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் இந்தாண்டு 650 விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
ஹஜ் குறித்து மக்கள் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். அதிக விலை காரணமாக சிலர் இந்த முறை ஹஜ்ஜுக்கு விண்ணப்பிக்கவில்லை. சிலர் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாகவும் தயக்கம் காட்டுகின்றனர்" எனத் தெரிவித்தார்.