ஜம்மு- காஷ்மீருக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் அம்பிகா சோனி, ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை கலந்தாலோசிக்காமல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை செய்தியாளர்கள் சந்திப்பில் முன்வைத்தார்.
இது குறித்து அவர், "ஜம்மு மக்கள் மறுசீரமைப்பைக் கோருகிறார்கள். அதனை நீங்கள் கொடுக்க விரும்பினால் தேர்தல் நடத்துங்கள். 90 நாள்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக அரசு எடுத்த முடிவுகளைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.
ஆனால் முடிவு எடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்குக் காட்டப்பட்ட கனவுகள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து பேசவிரும்புகிறேன். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டபோது, மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். மாநில மக்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முடிவு, வேலை இழப்பு குறித்த அச்சம், நிலம் குறித்த கவலைகளுக்கு வழிவகுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு வேலை, சுற்றுலா வரும் வெளியாட்களும் கவலைப்படுகிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது. இதனை மீட்டெடுப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். சமூக ஊடகங்கள் (ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவை) செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எனது அனுபவத்தின்படி அப்படி தெரியவில்லை. மக்களை எவ்வளவு காலம் தடுத்துவைப்பீர்கள்?
முன்னாள் முதலமைச்சர்களை எவ்வளவு காலம் தடுத்துவைப்பீர்கள்? சமீபத்திய நகர்வுகள் காஷ்மீரை சர்வதேசமாக்கியுள்ளன. காஷ்மீர் உள்நாட்டு பிரச்னை என்பதால் நாங்கள் அமைதி காத்தோம். ஆனால் சமீபத்திய நகர்வுகள் அதனை சர்வதேச பிரச்னை ஆக்கிவிட்டது" எனக் கூறினார்.
அம்பிகா சோனி, சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டது குறித்து நேரடியாகப் பேசுவதை தவிர்த்தார். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் ஒருதலைப்பட்சமானவை என்ற கருத்தை முன்வைத்தார். வீட்டுக் காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள், மற்றும் சில தலைவர்கள் குறித்தும் அம்பிகா சோனி கவலை தெரிவித்தார். மேலும் இது எத்தனை காலம் தொடரும் எனவும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் நடக்கவிருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு ரத்து! அதன் பின்னணி என்ன?