ஜார்கண்ட் மாநிலம் கார்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ஓரான். இவர் அந்தக் கிராமத்திலுள்ள ஒரு கூடாரத்தை அகற்ற முயன்றுள்ளார். அப்போது உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சாரக் கம்பி உரசியதில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அவரை சான்கோ பகுதிலிருக்கும் சுகாதார மையத்தில் அனுமதித்தனர்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஜிதேந்திரன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், ஜிதேந்திரனின் உறவினர்களுக்கு அது ஏமாற்றமும் அதிர்ச்சியுமாக இருந்தது. மறுபக்கம் உயிரிழந்த ஜிதேந்திரனின் உடலை உடற்கூறாய்வு செய்ய ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
இந்நிலையில், உடற்கூறாய்வு மேசையிலிருந்த ஜிதேந்திரனைக் காண அவரது குடும்பத்தினர் பிணவறைக்குச் சென்றனர். அப்போது அவர்கள் ஜிதேந்திரன் சுவாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். உற்றுப் பார்த்தபோது ஜிதேந்திரன் உயிரோடு இருப்பது தெரியவந்தது.
உடனடியாக, அங்கிருந்த அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் சுகாதார மையத்தின் அவசரப் பிரிவுக்கு உயிரிழந்த நபரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என்றே மீண்டும் கூறினர்.
இது குறித்து ஜிதேந்திரனின் உறவினர்கள், “நாங்கள் பார்க்கும்போது அவன் சுவாசித்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவசரமாக மருத்துவர்களுக்குத் தகவல்களைக் கொடுக்க விரைந்தோம். மருத்துவர்கள் முறையாகப் பரிசோதித்திருந்தால் அவன் உயிர் பிழைத்திருப்பான்” என்றனர்.
ஒருபுறம் மருத்துவர்கள் ஜிதேந்திரன் உயிரிழந்ததாகக் கூற, மறுபுறம் அவருடைய உறவினர்கள் சுவாசித்ததாக வாதாடுகிறார்கள். இதனால் உயிரோடு இருந்தவரை எப்படி உடற்கூறாய்வு செய்ய ஏற்பாடு செய்தார்கள் எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பிகாரில் செத்து விழுந்த 200 வௌவால்கள்!