நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. அதில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில், '' கரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் பெரும்பான்மையான தொழில்கள் நலிவடைந்துள்ளன. இதற்கு மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட கரோனா வைரஸ் நிவாரண திட்டத்தில் நடுத்தர மக்களுக்கான எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. நமது நாட்டில் நடுத்தரவர்த்தினர் தான் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றனர்.
பொருளாதார சரிவைப் பற்றி நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார சரிவை சரி செய்வதற்காக எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி சிக்கல்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி இழப்பீட்டு விவகாரத்தில் பல மாநிலங்களின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'கடவுளின் செயல்' என்று காரணத்தை கூறி ஜிஎஸ்டி இழப்பீட்டு பிரச்னையை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கிறார்.
கரோனா வைரஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தின் சரிவிற்கு காரணம் என குறிப்பிடுகிறார். கடன் வாங்குவதற்கான கூடுதல் சுமையை மாநிலங்களால் சுமக்க முடியாது'' என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசு பணிகளில் தமிழ்நாட்டிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருச்சி சிவா