பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், சீன செயலியான டிக் டாக், கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் 24 கோடி பயனாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் கசிவுக்கு பாதுகாப்பற்ற தரவுத்தளமே காரணம் என கம்பாரிடெக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில், "இந்தத் தகவல்கள் பல தரவுத் தொகுப்புகளில் பகிரப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் 100 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளன.
டிக்டாக்கின் 42 மில்லியன் பயனாளர்களின் தகவல்களும் யூடியூப்பின் நான்கு மில்லியன் பயனாளர்களின் தகவல்களும் கசிந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐந்தில் ஒரு பயனாளர்களின் தொலைபேசி எண், இமெயில் ஐடி, பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கம்பாரிடெக் நிறுவனத்தின் செய்தியாளர் பால் கூறுகையில், "தகவல் திருட்டில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளுக்கு இத்தகவல்கள் விலை மதிப்பற்றவை. இம்மாதிரியான தகவல்கள் பொதுவெளியில் இருந்தாலும், தகவல் கசிவு என்பது கட்டமைக்கப்பட்ட வடிவில் நடைபெறுகிறது. தகவல்கள் தனியாக இருப்பதை விட இம்மாதிரியாக ஒட்டு மொத்தமாகக் கசியும்போது அது விலைமதிப்பற்றதாகக் கருதப்படுகிறது" என்றார்.
முன்னதாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் தகவல் கசிவில் ஈடுபட்ட ’டீப் சோசியல்’ என்ற நிறுவனத்திற்கு 2018ஆம் ஆண்டு தடை விதித்தது நினைவுகூறத்தக்கது.
இதையும் படிங்க : பெங்களூரு கலவரம்: தொடரும் கைது நடவடிக்கைகள்!