பரேலி: இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் கரோனா காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்த வேண்டும் என ஆலா ஹஸ்ரத் தர்காவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்லாமியர்களின் இறுதிச் சடங்கு இஸ்லாமிய முறைப்படி நடைபெற வேண்டும். இறந்தவர் உடலின் மூலம் வைரஸ் பரவாது என உலக சுகாதார மையம் தெரிவித்த போதிலும், இஸ்லாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஆலா ஹஸ்ரத் தர்காவின் துணைத் தலைவர் சல்மான் ஹசன் கான், இறந்தவர்கள் உடலை தகனம் செய்வதை இஸ்லாமியம் ஒருபோதும் அனுமதிக்காது. கரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்கின்றனர். இது இஸ்லாமிய மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகமாக நடப்பது குறிப்பிடத்தக்கது.