தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக உருவெடுத்துள்ளது. நிசார்கா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயலாக நிசார்கா உருவெடுத்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படைகளின் 30 குழுக்கள் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது சுமார் 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் இரண்டு கடலோர மாவட்டங்களான ராய்காட், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து புவி அறிவியல் துறைகளுக்கான அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், "இந்த அதி தீவிர புயல் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். இருப்பினும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலுள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அதி தீவிர புயல் காரணமாக மும்பையில் சுமார் 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புயல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுள்ளதாக பெருநகர மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மோடியை மதிக்காத சேட்டன்கள்: கேரளாவில் குறைந்த மதிப்பீட்டை பெற்ற மோடி!