தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா புயல், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் கரையைக் கடந்தது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. மீட்புப் பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தப் புயலினால் மகாராஷ்டிராவில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்ததாலும், வீட்டின் கூரைகள் இடிந்து விழுந்ததினாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
புயலினால் ஏற்பட்ட முழுச்சேதங்கள் குறித்த அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.