இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, ஆம்பன் புயலாக மாறி, வங்கக் கடலின் தென்கிழக்காக நகர்ந்து, வடக்கு, வடமேற்காக கடந்த 6 மணிநேரத்தில் 6 கி.மீ வேகத்தில் சென்று வருகிறது. இது அடுத்த 6 மணிநேரத்தில் தீவிர புயலாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும் என இந்திய வானிலை மையம் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆம்பன் புயல் 11.4 டிகிரி வடக்காகவும், 86.0 டிகிரி அட்சரேகை கிழக்காகவும் இருக்கிறது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து 900 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திஹகா நகரின் தென் தென்மேற்கிலிருந்து 1,140 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபாரா நகரிலிருந்து தென்மேற்கிலிருந்து 1,260 கிமீ தொலைவிலும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆம்பன் புயல் வங்கக் கடலில் வடக்கு வடகிழக்காக, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே சாகர் தீவு, ஹதியா தீவுப்பகுதியில் மே 20ஆம் தேதி அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரும், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நேற்று (மே 16) ஆம்பன் புயல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கம், ஒடிசாவுக்கு உடனடியாக உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டது.
புயலின் சூழல், நகர்ந்து செல்லும் விதம், புயலை எதிர்கொள்ள தயாராகி இருப்பது, மீட்பு நடவடிக்கைகள், உதவிகள் வழங்குவது குறித்து பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.