கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், சைபர் தாக்குதல் என்பது பல மடங்குகள் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சைபர் தாக்குதல்களுக்கு, பொதுமக்கள் மட்டுமின்றி பெருநிறுவனங்களும் ஏன் சில சமயங்களில் அரசு துறைகளும்கூட இரையாவர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரிலுள்ள மின் மேம்பாட்டுத் துறையின் நான்கு சர்வர்களை சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்துள்ளனர். இதை மின் மேம்பாட்டுத் துறையின் தலைமை பொறியாளர் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மின் மேம்பாட்டுத் துறையின் தலைமை பொறியாளர் அஜாஸ் தார், "புதன்கிழமை காலை 4.45 மணிக்கு ஸ்ரீநகரிலுள்ள எங்கள் மையத்தில் இருந்த நான்கு சர்வர்கள் ரான்சம்வேர் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்தோம். இது குறித்து சைபர் பிரிவிடம் புகாரளித்துள்ளோம்.
சைபர் பிரிவு காவல் துறையின் ஆலோசனையின்படி ரான்சம்வேரால் பாதிக்கப்பட்ட நான்கு சர்வர்களையும் தனிமைப்படுத்தியுள்ளோம். எங்களிடம் மொத்தம் 55 சர்வர்கள் இருந்தன, அதில் நான்கு சர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், எங்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்றார்.
2010ஆம் ஆண்டுக்கு பின் ரான்சம்வேர் தாக்குதல் என்பது அதிகரித்துவருகிறது. இதில் போலியான இணைப்புகளை அனுப்பி, ஃபிஷிங் மூலம் ஒருவரது கணினி, சர்வர் ஹேக் செய்யப்படும். பின்னர், அதிலிருக்கும் தகவல்களை யாரும் நெருங்க முடியாதபடி ஹேக்கர்கள் encrypt செய்வார்கள்.
ஹேக்கர்கள் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், encrypt செய்யப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் ரீலிஸ் செய்வார்கள். சோனி, ஹெச்பிஓ போன்ற பெருநிறுவனங்களும்கூட இதுபோன்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு இரையாகியுள்ளது.
தொடர்ந்து பயனாளர்களின் தகவல் குறித்துப் பேசிய தலைமை பொறியாளர் அஜாஸ் தார், "அனைத்து பயனாளர்களின் தகவல்களும் பாதுகாப்பாகவே உள்ளது. இம்மாத மின் பயன்பாட்டிற்கான பில்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. எனவே, இந்தத் தாக்குதலால் அது பாதிக்கபடவில்லை.
இருப்பினும், நுகர்வோர்கள் இம்மாத மின்சாரக் கட்டணத்தை நேரடியாக மின்வாரிய அலுவலகத்திலும் வங்கி மூலமும் மட்டுமே செலுத்த முடியும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முடியாது" என்றார்.
இந்தத் தாக்குதலில் சீன ஹேக்கர்களின் பங்கு இருப்பதாகப் பரவிய தகவல் குறித்து சைபர் பிரிவில் உள்ள மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஆன்லைன் மோசடிகளுக்கு இந்த ரான்சம்வேர் பயன்படுத்தப்படும். இருப்பினும், இந்த மோசடியில் சீன ஹேக்கர்களுக்கு பங்கு உள்ளதா இல்லையா என்பதை உறுதியாகக் கூறமுடியாது.
இதுபோன்ற சம்பவங்களில் பொதுவாக மின்னஞ்சலில் போலியான இணைப்புகளை அனுப்பி, ஃபிஷிங் மூலம் ஒருவரது கணினி அல்லது சர்வர் ஹேக் செய்யப்படும். ஜம்மூ காஷ்மீரில் அரசு நிறுவனம் ஒன்று சைபர் தாக்குதலுக்கு இரையாவது இதுவே முதல்முறை. இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தப்பிப்பது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம்" என்றார்.
முன்னதாக, சீனாவின் செங்டு பகுதியிலிருந்து சுமார் 40 ஆயிரம் ஹேக்கிங் முயற்சிகள் நடைபெற்றதாக மகாராஷ்டிர காவல் துறையில் புகார் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங் - எச்சரிக்கை தேவை!