கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த துஷார் பாண்டா, கூகுளில் பிளாக் மேஜிக் தொடர்பாக தேடி வந்துள்ளார். அப்போது, www.aghori.baba என்ற இணையதளம் அவரது கண்ணில் சிக்கியுள்ளது. தொடர்ந்து, அந்தத் தளத்திற்கு துஷார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடந்து ஒரு நிமிடம் கழித்து துஷாருக்கு ”இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்” என்ற குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அத்தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டபோது பேசிய நபர், தன்னை தீபக் பாபா என்று அறிமுகப்படுத்தி கொண்டு அவரது பிரச்னையைக் கூறுமாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு துஷார், வீட்டில் அமைதி இல்லை என்றும், ஒவ்வொரு வேலையிலும் தான் தோல்வியடைந்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். அதற்கு தீபக் பாபா, ”உடனடியாக நான் உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன். ஆனால், நீங்கள் முதலில் ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் மட்டுமே வேலையைத் தொடங்க முடியும். உங்கள் கவலையை விரட்ட முடியும்” என ஆசை வார்த்தை பேசியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய துஷார், உடனடியாக பணத்தை அவருக்கு ஆன்லைனில் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பாபாவின் தொலைபேசி எண், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அவர் மாயமாகி விட்டார்.
இணையதளத்திலும் யாரும் ரிப்ளை செய்யவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த துஷார், உடனடியாக சைபர் காவல் துறையிடம் புகார் அளித்தார். துஷார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.