குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்தே டெல்லி முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம், ஷாகீன் பாக் உள்ளிட்ட பகுதிகளில் அச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழலில், டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற போராட்டம் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் டெல்லி காவல் துறையினருடன் ஆலோசானை நடத்தினர். கெஜ்ரிவால் டெல்லி மக்களிடம் கலவரத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலிடம் டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படதாகக் கூறப்பட்டது. மேலும், அவர் மோடி, மத்திய பாதுகாப்பு குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நடைபெறும் கலவரத்தை, காவல் துறையினர் வேடிக்கை பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டும் மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ராணுவத்தை அங்கு குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இத்தகைய பரபரப்பான சூழலில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. இதில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரம் குறித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தோல்வியடைந்ததை எதிர்த்து நாடாளுமன்றம் வரை பேரணி செல்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துவரும் காங்கிரஸ் கட்சி, டெல்லி கலவரத்தைக் கையிலெடுத்து மத்திய அரசை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் : மோடி, மத்திய பாதுகாப்பு குழுவுடன் அஜித் தோவால் இன்று ஆலோசனை!