நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நாட்டின் தலைநகரமான டெல்லியில் கரோனா தொற்று பாதிப்புகள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் சமூகப் பரவல் நிலையைக் கரோனா எட்டிவிட்டதா என்ற குழப்பம் மக்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் மத்தியில் நிலவியது.
இதையடுத்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கரோனா அறிகுறிகள் இருந்ததால், தானாகவே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவருக்குப் பதிலாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில் பேசிய சிசோடியா, கரோனா சமூகப் பரவல் நிலையை டெல்லியில் அடைந்தது உறுதியானால், கரோனாவுக்கு எதிராகப் போராடும் நமது பாதையை மாற்றியமைக்க வேண்டும் என உயர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், நாளை (ஜூன் 9) மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் நடைபெறும் முக்கியமானக் கூட்டத்தில் பல நிபுணர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் கரோனா பாதிப்புகள் 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.