மத்திய சிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தனது வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக தரவுகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களை, ஹை சென்சிட்டிவான பகுதிகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப்பின் புதிய வழிகாட்டுதல்கள் ஜவான்கள், சிவில் ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் பொருந்தும் என்றும், யாராவது விதிமீறி ஸ்மார்ட்போனை அலுவலகத்திற்கு கொண்டு வந்தால், பிரத்யேக கவுண்டரில் அவை வாங்கி வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இந்தப் புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படை நோக்கம், தகவல் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை வரையறுப்பதாகும். தகவல் பாதுகாப்பின் அடிப்படைக் கொள்கைகள் ரகசியத்தன்மையும் ஒருமைப்பாடும் ஆகும். தகவல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும், ஒரு நிறுவனத்தால் வைக்கப்படும் ஒவ்வொரு பாதுகாப்புக் கட்டுப்பாடும், பணியில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை கோடிட்டு காட்டுகின்றன. அதிகப்படியான கட்டுப்பாடற்ற செயலி உபயோகம், பாதுகாப்பு மீறலுக்கு வழிவகுக்கிறது.
எனவே, கேமரா, இணையம் ஆகிய வசதிகளின் அடிப்படையில், ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன்கள் என இரண்டு பிரிவுகளாக தொலைபேசிகள் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் பணியிடங்களும், ஹை சென்சிட்டிவ், நடுத்தர, குறைந்த சென்சிட்டிவ் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், ஹை சென்சிட்டிவ் பகுதிகளில் ஸ்மார்ட்போன் முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது. மீடியம் சென்சிடிவ் பகுதியில் உயர் அலுவலர்களிடம் அனுமதி பெற்ற பிறகே ஸ்மார்ட்போன்களைக் கொண்டு செல்லலாம். குறைந்த சென்சிடிவ் பகுதிகளில் அனைவரும் தடையின்றி ஸ்மார்ட்போன்களை உபோயாகிக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களில், சமூக வலைதளங்கள், வலைப்பதிவுகளில் பதிவிடப்படும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அவர்களே பொறுப்பு என்பதை அரசு அலுவலர்கள் உணர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.