நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 'க்ரைம் இன் இந்தியா -2019' அறிக்கையைச் சுட்டிக்காட்டி பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு 'ஆம்' என பதிலளித்தபடியே மத்திய இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தனது உரையைத் தொடங்கினார்
இதுகுறித்து அவர் கூறுகையில், " பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2019 ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடும், 26.5 விழுக்காடும் அதிகரித்துள்ளது உண்மைதான். இதுபோன்ற குற்றங்களைச் சமாளிக்க, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்ககைளை எடுத்து வருகின்றன; மத்திய அரசும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. குற்றங்களை தடுத்திட புதிதாக பிரத்யேக குழு நியமனம், சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன. பட்டியலின, பழங்குடியின சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் நிச்சயம் குறைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.