ஹத்ராஸ் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், எங்கள் ஒப்புதலின்றி உடலை தகனம் செய்ததாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வாக்குமூலம் அளித்துள்ளனர். வழக்கை வேறொரு மாநிலத்திற்கு மாற்ற குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை தகனம் செய்வது குறித்த முடிவை உள்ளூர் நிர்வாகமே எடுத்ததாகவும் மாநில அரசிடமிருந்து எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை எனவும் நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் லக்சார், காவல் துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் ஆகியோர் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டே பெண்ணின் உடல் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் இரண்டாம் தேதிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
ஹத்ராஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரப் பிரதேச அரசு பரிந்துரைத்த நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது.