டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், டெல்லி சிறையிலும் கரோனா தொற்று கைதிகள், அலுவலர்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது. சில நாள்கள் முன்பு தூக்கத்திலேயே இரண்டு கைதிகள் உயிரிழந்தனர். அவர்களைப் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதியானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, சிறையில் பரவும் வைரஸைக் கட்டுப்படுத்த உயர் அலுவலர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்தக் குழுவினர், சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பது, கைதிகளுக்கு ரேபிட் சோதனை மூலம் கரோனா பாதிப்பைக் கண்டறிவது போன்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், 'சிறை அலுவலர்களிடம் 18 முதல் 21 வயதிற்குட்பட்ட புதிய கைதிகளைத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்க வைக்க அறிவுறுத்தியுள்ளோம். இதுமட்டுமின்றி மண்டோலி சிறைச்சாலைக்கு அருகில் காலியாக உள்ள 360 காவலர்கள் குடியிருப்புகளில் கைதிகளைத் தனிமைப்படுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், புதிய கைதிகளுக்கு கரோனா பரவாமல் தடுப்பதற்காக சிறைக் கைதிகள் அனைவருக்கும் ரேபிட் சோதனை முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர். நேற்று வரை(ஜூன் 20) சிறையிலிருந்து பரோல், பிணையில் வெளியே சென்ற கைதிகளுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க அடுத்த 45 நாள்களுக்கு விடுப்பு காலத்தை நீட்டிக்கப்பட்டுள்ளதாக' குறிப்பிட்டுள்ளனர்.