இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். முரளிதர் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து அவர் அளித்த நீதிமன்ற உத்தரவுகளே காரணம்.
டெல்லி கலவரத்திற்கு வழிகோலிடும் வகையில், பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக மூத்தத் தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி டெல்லி காவல் துறையினருக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதரின் அமர்வு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.
மத்திய உள் துறை அமைச்சகத்தின் வழக்கறிஞராக உள்ள துஷார் மேத்தாவை கடுமையாகக் கண்டித்த அவர், ‘உங்களைப் போன்றவர்களின் பொறுப்பற்ற போக்குதான் தலைநகர் டெல்லியில் நடந்த கலவரத்தைத் தூண்டியதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது’ என்று கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தி உள்ளார்.
இதன் காரணமாகவே டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இரவோடு இரவாக பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு நேற்றே இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தப் பணியிடமாற்றத்திற்கு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியே பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசுகிற அளவுக்கு நீதிமன்றத்தின் தரம் தாழ்ந்துவருகிற நிலையில் இத்தகைய பழிவாங்கும் போக்கு நடைபெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
மத்திய பாஜக அரசு, அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அனைத்து நிறுவனங்களையும் அச்சுறுத்திவருகிறது.
தற்போது நீதிமன்றத்தை அச்சுறுத்தி, அச்சத்தில் ஆழ்த்திவருகிற செயலில் ஈடுபட்டிருப்பதைவிட ஜனநாயக, சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியக் குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கிற ஒரே அமைப்பாக இருக்கிற நீதிமன்றங்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது நீதித் துறை அமைப்பில் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
எனவே, இந்திய நீதித் துறை அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் இந்த இடமாற்ற உத்தரவை நீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தேர்தலில் தலையிட வெச்சிடாதீங்க - அமெரிக்காவை எச்சரிக்கும் பாஜக பிரமுகர்