நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் அதிதீவிரம் அடைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்தத் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில், மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து உரையாற்றினார்.
அதில், "கரோனாவுக்கான தடுப்பூசி கண்டறிவதில் மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மூன்று தடுப்பூசிகளுக்கான பரிசோதனைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், நிபுணர்கள் குழு அதனைக் கண்காணித்து வருகிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் முயற்சித்துவருகிறோம்"
ஜைடஸ் காடிலா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகள் முதல் கட்டத்தை நிறைவு செய்துள்ளன. இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்ற பின்னர் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மீண்டும் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் என்ற தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவும் இணைந்து பங்காற்றிவருகிறது. புனேவை தளமாகக் கொண்ட எஸ்ஐஐ, இந்தியா முழுவதும் 17 தளங்களில் சோதனைகளை கவனித்துவருகிறது.
மேலும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மற்றும் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேபாரெட்டரீஸ் லிமிடெட் ஆகியவை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
இதையும் படிங்க: எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிக்கவிடும் சீன ராணுவம் : எதற்காக
?