இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதில் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 772ஆக உள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு சார்பாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுவருகிறது.
இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பேசுகையில், ''கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு முன்பாக மாநில அரசால் ஒட்டப்படும் எச்சரிக்கை நோட்டீஸ் மக்களிடையே சமூகப் பாகுபாட்டை ஏற்படுத்துவதோடு, நவீன தீண்டாமையை உருவாக்கும். தொற்றால் பாதித்த குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். இதனால் இந்த நடவடிக்கையை மாநில அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டுவதற்குப் பதிலாகப் பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கு அருகே உள்ள பகுதிகளுக்குச் சுகாதாரப் பணியாளர்களை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் கரோனா பாதிப்பிற்கு மருத்துவம் செய்ய முடியாது எனக் கூறும் மருத்துவமனைகளின் உரிமங்கள ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்க முடியாது.
மருத்துவம் செய்ய முடியாது என கூறுவது தவறுதான். ஆனால் இந்த நேரத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பயத்தினைப் போக்க வேண்டுமே தவிர, எச்சரிக்கக் கூடாது. மருத்துவமனைகளின் உரிமங்களை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை'' என்றார்.
இதையும் படிங்க: காற்றில் பரவும் கரோனா: இது ஒரு ஆபத்தின் சமிக்ஞை