வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க 'கோவிட் குறிப்புகள்' என்ற இணையப் பரப்புரையைக் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி தொடங்கியுள்ளது. இதன் மூலம் 14 மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ஊரடங்கால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரப்புரை குறித்து ‘கல்லூரியின் துணை பேராசிரியர் நிர்மலா பத்மநாபன் கூறுகையில், "இந்த ஊரடங்கை நினைத்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதனால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் அதிக நேரத்தை இதனால் செலவழிக்க முடியும். மக்கள் தங்கள் அனுபவங்களை வாட்ஸ்அப் மூலம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
பரப்புரை தொடங்கப்பட்டு சிறிது நேரத்திலேயே பலர் தங்கள் அனுபவங்களை அனுப்பத் தொடங்கிவிட்டனர். 200 மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழு இந்த பரப்புரையை மேற்கொள்கிறது. வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை இந்த பரப்புரையை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தப் பரப்புரை ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் - பதறும் ராகுல்!