கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் குணப்படுத்துவதற்காக முன்னின்று பணியாற்றிவருபவர்களில் மிக முக்கியப் பங்காற்றுபவர்கள் செவிலியர். ஆனால், இவர்களுக்கு எதிராகவும் சில மோசமான சம்பவங்கள் நிகழ்த்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்துள்ளது.
சிக்கல்தானா பகுதியில் வசிப்பவர் ஷில்பா ஹிவாலே. இவர் மாவட்ட மருத்துவமனையில் பணிபுரிகிறார். இந்நிலையில், மே 11ஆம் தேதி இரவு 1 மணியளவில் சிலர் தண்ணீர் கேட்கும் சாக்கில் ஷில்பாவின் வீட்டிற்கு வந்தனர். அவர் சமையலறையின் ஜன்னலைத் திறந்துபார்த்தபோது, வெளியில் இருந்தவர்கள் ஷில்பாவை மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர்.
இதற்கிடையில், ஷில்பாவை தாக்கி அச்சுறுத்தினர். மேலும், “உன்னால் (ஷில்பா) குடியிருப்பின் முழுப் பகுதியும் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்” என்று கூறினார். ஆகவே, “இங்கிருந்து செல்லாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றும் மிரட்டல்விடுத்தனர். இது தொடர்பாக ஷில்பா, சிட்கோ எம்ஐடிசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், “என்னைச் சிலர் குச்சிகளால் தாக்கினார்கள்” என்றும் தெரிவித்திருந்தார். அவுரங்கபாத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்பதற்கான பல பகுதிகள் உள்ளூர்வாசிகளால் சீல்வைக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்பவர்களும் நோய்ப்பரவாமல் இருப்பதற்காகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும், செவிலியரும் பல சிக்கல்களைச் சந்தித்துவருகின்றனர். உள்ளுர்வாசிகள் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதோடு அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறும் வற்புறுத்துகின்றனர். கடந்த சில நாள்களாக ஷில்பாவும் இதே பிரச்னையை எதிர்கொண்டுள்ளார். உள்ளூர்வாசிகள் அவரை மிரட்டுவதோடு வெளியேறும்படி அச்சுறுத்துகின்றனர்.
ஷில்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், புகாரைத் திரும்பப் பெறக்கூறியும் சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர். இது குறித்து ஷில்பா கூறுகையில், “எனக்கு மருத்துவமனையிலிருந்து தங்க விடுதி கிடைக்கவில்லை. என் மகனுக்கும் உடல்நிலை சரியில்லை. அவனுக்கு ஒரே ஒரு சிறுநீரகம் மட்டும்தான் உள்ளது.
அதனால், என்னால் அவனைத் தனியாக விடமுடியாது. இதுபோன்ற பிரச்னைகள் எனக்கு இருக்கும்பட்சத்திலும், உள்ளூர்வாசிகள் எங்களை இவ்வாறு துன்புறுத்துகின்றனர்" என்றார். மேலும், கரோனா நோயாளிகளுக்குச் சேவைசெய்வது குற்றமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கரோனா தொற்றால் மக்கள் நெருக்கடியான சூழலைச் சந்தித்துள்ள இச்சூழலில், தங்கள் உயிரையும், குடும்பத்தினரையும் பற்றி கவலைகொள்ளாமல் நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் சுயநலமற்ற மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் நிகழும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிப்பதாக உள்ளது.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டு வந்த 85 வயது மூதாட்டி!