தெலங்கானா மாநிலம், நிஷாம்பாத் நகரில், கரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி, ஆட்டோவில் எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியான காணொலி ஒன்று நேற்று(ஜூலை 11) சமூக வலைதளங்களில் வைரலானது.
நன்கு சுற்றப்பட்ட நோயாளியின் உடலில் தலை, கால்கள் மட்டுமே வெளியே தெரியும்படி கொண்டு செல்லப்பட்டது அந்த காணொலியில் பதிவாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரும் உடன் அமர்ந்திருந்த நகராட்சி ஊழியரும் தனி மனித பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்கவில்லை.
இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், 'வெள்ளிக்கிழமை(ஜூலை 10) நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அவர்களின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களுடைய உறவினர்கள் ஆம்புலன்ஸுக்காக காத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிஷாம்பாத் மாவட்ட ஆட்சியர், உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லும்போது உடனிருந்த ஒப்பந்த ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளார்.
மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி உறவினர்களிடையே ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர்கள் மீது, கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநர் ரமேஷ் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடியைத் தொடர்ந்து இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் சமூகப் பிரச்னை 'வேலை வாய்ப்பின்மை'